Saturday, December 17, 2011

பெர்முடா முக்கோணம்.. ஓர் அதிசயம்

புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு, நிலாவில் நீர் கண்டுபிடிப்பு, இரட்டை சூரியன் கண்டுபிடிப்பு என தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நம் விஞ்ஞானிகள், நீண்ட காலமாக ஒரு விஷயத்தை பற்றிய ஆராய்ச்சியை கையில் எடுக்க பயப்படுகின்றனர். அது "பெர்முடா முக்கோணம்'. இதை சாத்தான் முக்கோணம் என்றும் அழைப்பார்கள்.
பெர்முடா முக்கோணம்:
வட அட்லாண்டிக் கடல் பகுதியில், பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு, கரீபியன் தீவுகள் மற்றும் அட்லாண்டிக்கின் கிழக்கு பகுதியிலிருந்து அசோரஸ் வரை
உள்ள பகுதிகளை இணைத்தால் முக்கோணம் போன்ற தோற்றம் கிடைக்கும். இது பெர்முடா முக்கோணம். ஆனால், மேலைநாட்டு எழுத்தாளர்கள் புளோரிடா கடற்கரை, சான் ஜூன், போர்ட்டோ ரிகா மற்றும் பெர்முடாவின் மத்திய அட்லாண்டிக் தீவு ஆகியவை இணைந்த பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைப்பார்கள். இந்த பகுதியில் செல்லும் கப்பல்கள், விமானங்கள், படகுகள் அனைத்தும் மாயமாய் மறைகின்றன என்ற மர்ம ங்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீரிணைப்பின் தெற்கு பகுதியில் தான் விபத்துகள் நடந்ததாக கூறப்படுகிறது.
பயமுறுத்தும் சம்பவங்கள்:
1872 ஆம் ஆண்டு மேரி செலஸ்டி என்ற கப்பல் மர்மமான முறையில் மறைந்தது முதல் சம்பவமாக கருதப்படுகிறது. 1918ஆம் ஆண்டு, "யு.எஸ்.எஸ்., சைக்ளோப்ஸ்' என்ற கப்பல் 309 ஊழியர்களுடன் மறைந்தது. 1945ஆம் ஆண்டு பிளைட் 19 என்ற போர் விமானம் இந்த பகுதியில் பறக்கும் போது காணாமல் போனது. 1948ஆம் ஆண்டு டக்ளஸ் டிசி-3 என்ற பயணிகள் விமானம் மியாமி நோக்கி பறந்தது. ஆனால் செல்லும் வழியில் விமானத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. இதில் பயணம் செய்த 32 பேரின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதே வருடம் அசோரஸிலிருந்து பெர்முடா சென்ற விமானமும், ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் சென்ற பயணிகள் விமானமும் காணாமல் போனது. இதை போல் இன்னும் சில விமானங்களும் கப்பல்களும் இந்த பகுதியில் தொலைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மேற்கூறிய எந்த சம்பவத்திற்கும் போதிய ஆதாரமும், உறுதியான விளக்கங்களும் தரப்படவில்லை.
மறுக்கும் லேரி:
அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலகரான லாரன்ஸ் டேவிட் கூச் என்பவர், தான் எழுதிய "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி: சால்வ்டு' என்ற புத்தகத்தில், பெர்முடா முக்கோணம் தொடர்புடைய செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகள், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த எழுத்தாளர்கள் கற்பனையாக எழுதியது என்றார். காணாமல் போனதாக கூறப்படும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெப்பமண்டல புயல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இயல்பு. காணாமல் போனதாக கூறப்படும் கப்பல்களின் தகவல்களை பதிவு செய்யும் அதிகாரிகள், சில மாதம் கழித்து அந்த கப்பல் மீண்டு வந்துவிட்டால் அந்த தகவல்களை பதிவு செய்வதில்லை. என்று தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஜப்பானிலும் "பேய்கடல்' :
பூமியில் பெர்முடா முக்கோணத்தின் மறுமுனையில் ஜப்பான் நாட்டின் தென் கிழக்கு கடற்பகுதி உள்ளது. டோக்கியாவிலிருந்து 100 கி.மீ., தொலைவிலுள்ள மியாகி தீவில் இந்த பகுதி அமைந்துள்ளது. இதை சாத்தான் கடல் என்றும் டிராகன் முக்கோணம் என்றும் அழைப்பார்கள். காரணம் இந்த பகுதியை தாண்டி செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களும் மாயமாகின்றன. இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட போது காந்த மாறுபாடு (மேக்னடிக் வேரியேஷன்) குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விபத்துகள் நடந்திருக்கும் என்றும் பெர்முடா முக்கோணப் பகுதியில் ஏற்படும் சம்பவங்களுக்கும் இது தான் காரணம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெர்முடா முக்கோணமாக கருதப்படும் பகுதியில் அதிகமான கப்பல் போக்குவரத்து நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினமும் சரக்கு மற்றும் சொகுசு கப்பல்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றன. அதே போல், பயணிகள் மற்றம் வர்த்தக விமானங்கள் புளோரிடா தீவு பகுதிகளுக்கு இடையில் சென்று வருகின்றன. பெர்முடா முக்கோணம் தொடர்பான மர்மங்களும். கதைகளும் எழுத்தப்பட்டு வருகின்றன.