Thursday, May 5, 2011

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்........ஷ்ஷ் அப்பா!! சம்மர் வந்தாச்சு...

ஒரு வழியாக கோடைகாலம் துவங்கி விட்டது. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. கோடைக் காலத்தில் "இதைச் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும்" "அதைச் சாப்பிட்டால் சூடு பிடிக்கும்' என்ற ஆலோசனைகள் நம்மைச் சுற்றும். ஆனால் வெப்பத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்களுக்காக இங்கு சில "நச் டிப்ஸ்'கள்...
* வெயிலில் திரிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் உடனடியாக ப்ரிட்ஜை திறந்து கடகடவென கூல் வாட்டர் குடிக்க நன்றாக இருக்கும். ஆனால், அது பெரும் தவறு . எனவே, கொஞ்சம் "ரிலாக்ஸ்' ஆகிவிட்டு தண்ணீர் பருகுங்கள். மேலும் பிரிட்ஜ் தண்ணீரால் ஜலதோஷம், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். அதைவிட, மண்பானையில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இயல்பாகவே அந்த நீர் குளிர்ச்சி அடைவதால், கெடுதல் எதுவும் இருக்காது.
* குழந்தைகள், கோடையைக் கொண்டாடி விளையாடும்போது, அவர்கள் உடலிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும் (டிஹைட்ரேஷன்). தாகம் எடுத்தாலும், விளையாட்டு மூடில் அதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்களை தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம். குளுக்கோஸ் நீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
* தண்ணீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். வெட்டிவேரைப் போட்டு வடிகட்டி குடிப்பதும் குளிர்ச்சி தரும்.
* இளநீர், மோர், பழச்சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் பானங்களையும், ஐஸையும் தவிர்ப்பது நல்லது.
* எலுமிச்சைப் பழ ஜூஸ் மற்ற அனைத்தையும் விட சிறந்தது. ஒரு பழத்துக்கு அரை லிட்டர் நீர் விட்டு, உப்பு, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை கலந்து ஜூஸ் தயாரித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது பருகுங்கள்.
* கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் போடலாம். இவற்றிலும் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் போடவும். தேங்காய்ப் பால் சேர்ப்பது சிறந்தது.
* அளவில் சிறியதாக இருந்தாலும் நெல்லிக்கனி வெயிலுக்கு உகந்தது. வைட்டமின்- "சி' அதிகமாக உள்ள இந்தக் கனி, வெயிலில் நாம் இழக்கும் எனர்ஜியைத் திரும்பத் தரவல்லது.
* ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, வெள்ளரி என பழக்கலவை (ஃப்ரூட் சாலட்) செய்து, காலை அல்லது இரவில் உண்ணலாம்.
* வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி போன்றவை நீர்ச்சத்து நிறைந்த, வெயிலுக்கு ஏற்ற பழங்கள். அதற்காகவேதான் வெயில் காலங்களில் இவை விளைகின்றன. உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக் கொள்ள இந்தப் பழங்கள் உதவும்.
* மாம்பழம், பலாப்பழம் போன்றவை அதிகமாக கிடைக்கும். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் ஆபத்துதான். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, அளவாக சாப்பிடுவது முக்கியம் – குறிப்பாக, குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் <<உண்பதை தவிர்க்கவும்.
* மதிய நேரத்தில் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டாலும், இரவில் லைட்டாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து தள்ளி வைக்கும்.
* எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, சமோசா போன்ற அயிட்டங்களுக்கு தூரம் நிற்பது வயிறு, மனது, பர்ஸ் என அனைத்துக்கும் நல்லது.